அட்சய திருதியை உருவான வரலாறு, Akshaya Tritiya Story Tamil

அட்சய திருதியை உருவான வரலாறு, Akshaya Tritiya Story Tamil

சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை, 'அட்சய திருதியை' எனப்படுகிறது. 'அட்சயம்' என்றால் வளர்வது என்று பொருள். அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும். அதனால் அட்சய திருதியை அள்ள, அள்ளக் குறையாமல் செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது.

அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையும்என்றும் கூறப்படுகின்றது. அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமைநீங்கி வளமான வாழ்வு அமையும்.

அட்சய திருதியை அன்று பிறருக்கு பானகம் மற்றும் நீர்மோர் வழங்குவது சிறப்பு. தண்ணீர் தானம் கூட சிறந்தது.



அட்சய திருதியை கொண்டாடுவது எவ்வாறு உருவாகியது?


ஒரு சமயம் பாஞ்சாலை நாட்டை பூரியசஸ் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சிக் காலத்தில் பாஞ்சாலை நாட்டில் கடும் வறட்சி நிலவியது. மன்னரும் மக்களும் வறட்சியால் கடும் அவதியுற்றனர். அப்போது வேற்று நாட்டு மன்னர்கள் பாஞ்சாலை நாட்டின் மீது போர் தொடுத்து வந்தனர். போரில் வெற்றி பெற்று அவனது நாட்டையும் கைப்பற்றினர். 


ஆனால் மன்னன்பூரியசஸ் எதிரிகளின் கைகளில் சிக்காமல் தனது மனைவியுடன் காட்டுக்குள் சென்று தப்பி ஓடினான். செல்லும் வழியில் சில முனிவர்களை சந்தித்தான். தனது குறைகளை அவர்களிடம் முறையிட்டான். தனது நிலைமைக்கு காரணம் வேண்டி நின்றான். முனிவர்களும் தனது ஞான திருஷ்டி மூலம் அவனது நிலைமைக்கான காரணத்தை கண்டறிந்தனர். மன்னனை நோக்கி நீ பூர்வ ஜென்மத்தில் கொள்ளைக்காரனாக இருந்து பிறரை வழி மறித்து அவர்கள் பொருளை எல்லாம் அபகரித்துக் கொண்டாய். நீ செய்த அந்த பாவங்கள் காரணமாக உனக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்கின்றது. அதற்கு மன்னன் அப்படியானால் நான் எவ்வாறு அரசனாக ஆனேன் என்று கேட்டான். அதற்கு அவர்கள் நீ கொள்ளை அடித்த அதே சமயத்தில் தெரிந்தோ தெரியாமலோ ஒரு அந்தணருக்கு தண்ணீர் அளித்து உதவினாய். நீ தெரிந்தோ தெரியாமலோ தண்ணீர் அளித்து உதவியதன் காரணமாகத் தான் நீ அரசனாகப் பிறந்தாய் என்றனர். 


இதைக் கேட்ட மன்னன் தான் செய்த பாவங்களுக்காக வருந்தினான். அதே சமயத்தில் தான் தண்ணீர் தானம் செய்த ஒரு காரியத்திற்காக அரசனாகப் பிறவி அளித்த கடவுளை எண்ணி கண்ணீர் விட்டு தொழுதான். 


பிறகு அந்த மன்னர் அந்தக் காட்டிலேயே ஸ்ரீமன் நாராயணரை நினைத்து தியானம் செய்து வாழ ஆரம்பித்தான். மேலும் அட்சய திருதியை நாளில்,வெயிலில் வருபவர்களுக்கு நிழல் கொடுத்தும், குடிநீர் தானம் செய்தும் தொண்டு செய்து வந்தான்.


மன்னனின் தொண்டைக் கண்டு ஸ்ரீமன் நாராயணர் அவனுக்குக் காட்சியளித்தார். என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். மன்னன் இறைவனிடம், 'சுவாமி! நான் அடுத்த பிறவியில் புழுவாய் பிறந்தாலும், உன்னிடம் மாறாத பக்தி கொண்டவனாக இருக்க வேண்டும்' என்றான். அதற்கு இறைவனும் அவன் எண்ணப் படியே வரம் கொடுத்தார்.


பூரியசஸ் மன்னனுக்கு, மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள் அட்சய திருதியை ஆகும். அவன் செய்த தானத்தின் பலனாக, சில நாட்களில் உறவினர்கள் சிலர் உதவியுடன், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினான். அதன்பிறகு நல்ல முறையில் ஆட்சி செலுத்தினான்.

Comments

Popular posts from this blog

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

உத்தரகோசமங்கை...

அன்னம்+காவடி+ஆட்டம்