சந்திர கிரகணம்...

சந்திர கிரகணம்...

கிரகணம் நிகழும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பரிகாரங்கள் சொல்லப்படுவதுண்டு. ராகு பொதுவாகவே அள்ளிக்கொடுப்பார். நிகழும் சந்திர கிரகணத்தால் சில ராசிக்காரர்களுக்கு பரிகாரம் தேவையில்லை என்றாலும் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான பலன் கிடைக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

மேஷ ராசியில் உள்ள ராகு உடன் சந்திரன் இணையும் போது கிரகணம் நிகழ்கிறது. நவம்பர் 8ஆம் தேதி ராகு கிரகஸ்த சந்திர கிரகணம் நிகழ உள்ளது. ராகு அள்ளித்தருவார். அதுவும் கிரகண காலத்தில் ராகு சந்திரன் பார்வை படும் போது சில ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரும். அதுவும் ராஜயோகமாகவும் கோடீஸ்வர யோகமாகவும் அமையும். சந்திர கிரகணத்தால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான யோகம் கிடைக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி சந்திரகிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகியன மிகவும் முக்கியமான வானியல் நிகழ்வுகளாகும்.இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வரும் 8ஆம் தேதி செவ்வாய்கிழமை செவ்வாய் பகவான் ஆளக்கூடிய மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் நிகழும். இந்த கிரகணம் முழு சந்திர கிரகணம் என்றாலும் இந்தியாவில் மாலை நேரத்தில் சந்திரன் உதயமாகும் நேரத்தில் பகுதி நேர சந்திர கிரகணமாக பார்க்க முடியும்.

மேஷம் செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே.. உங்களுக்கு இந்த சந்திர கிரகணம் நிகழப்போகிறது. பொதுவாகவே கிரகணம் என்றால் பயப்பட தேவையில்லை. சந்திரன் ராசியில் பயணம் செய்யும் போது மிக முக்கியமான முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. அதுவும் ராகு உடன் இணையும் காலத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருக்கவும். ஜாமின் கையெழுத்து போட்டு யாருக்கும் பணத்தை கடனாக வாங்கித்தர வேண்டாம். வேலைப்பளுவினால் சோர்வு உள்ளிட்ட உடல் ரீதியான சில பாதிப்புகள் காரணமாக கிரகண நேரத்தில் வெளியில் சுற்றாமல் பூஜை செய்வது நல்லது. மவுன இருப்பது மன அமைதியை ஏற்படுத்தும்.

ரிஷபம் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே. உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்வதால் நிறைய செலவுகள் வரலாம். பெரிய அளவில் பணமுதலீடுகளை செய்யாமல் தவிர்ப்பது நல்லது. வெளி உணவுகளை தவிர்க்கவும். காரமான பாஸ்ட் புட் உணவுகளை கிரகண நாளில் சாப்பிட வேண்டாம். எளிமையான உணவுகளை மட்டுமே சாப்பிடுவது உடலுக்கு வயிற்றுக்கும் நல்லது. காலையிலேயே மகான்கள் ஜீவ சமாதிக்கு சென்று தரிசனம் செய்வது மன நிம்மதியைத் தரும்.

மிதுனம் புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே லாப ஸ்தானத்தில் சந்திரனும் ராகுவும் பயணம் செய்யும் நேரத்தில் கிரகணம் நிகழ்வதால் திடீர் பண வரவுகள் வரும். மூத்த சகோதரர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தாவிட்டால் கையில் இருப்பதை செலவழித்து விட்டு கடன் வாங்க நேரிடலாம். கிரகணம் முடிந்த பிறகு குளித்து விட்டு பூஜை செய்வது நல்லது. அருகில் உள்ள சிவன் ஆலயத்திற்கு சென்று அபிஷேகத்திற்கு பால் வாங்கித்தரலாம்.

கடகம் சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நிகழ்வதால் வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். சிடு சிடுவென உங்கள் மீது கடுப்பை காட்டிய உயரதிகாரியின் மனநிலையில் மாற்றம் ஏற்படும். ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். பண வரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த நல்ல காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

சிம்மம் சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே. உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான ஒன்று வீட்டில் சந்திர கிரகணம் நிகழ்வதால் நீண்ட நாட்களாக கடனாக கொடுத்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். கை விட்டு போன சொத்துக்கள் வீடு தேடி வர வாய்ப்புள்ளது. விற்று விட்ட பூர்வீக சொத்துக்களை திரும்ப வாங்க முயற்சி செய்வீர்கள். கிரகண நாளில் வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். அப்பாவின் உடலில் கவனம் அவசியம், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாகவும் மன ரீதியாகவும் பாதிப்புகள் கவனம். கிரகணம் முடிந்த பின் சிவ ஆலய தரிசனம் செய்வது நல்லது.

கன்னி புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. அஷ்டம ஸ்தானத்தில் கிரகணம் நிகழ உள்ளது. சந்திராஷ்டமம் வேறு உங்களை சங்கடப்படுத்தும். உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்ட வேண்டும். பண விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. இன்றைய தினம் தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் பண முதலீடு செய்ய வேண்டாம். யாருக்கும் பணம் கடனாக கொடுக்க வேண்டாம். பெரிய அளவில் பண இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். கடன் அடைக்க வேண்டியிருந்தால் இன்றைய தினம் ஒரு பகுதியை திருப்பி தருவது நல்லது. வேலையில் பளு அதிகரிக்கும். இன்றைய தினம் உடலுக்கும் மனதுக்கும் சற்றே ஓய்வு கொடுப்பது அவசியம்.

துலாம் சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் கிரகணம் நிகழ்கிறது. ராசியில் நான்கு கிரகங்கள் இணைந்துள்ளன. நான்கு கிரகங்களின் மீது சந்திரன், ராகுவின் பார்வை விழுகிறது. இன்றைய தினம் உங்களின் நிதி நெருக்கடிகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பண பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கிரகண யோகம் கைகூடி வரப்போகிறது. திடீர் ராஜயோகம் வர வாய்ப்புள்ளது. எப்போதோ செய்த முதலீடுகள் உங்களுக்கு லாபம் தரப்போகிறது. இன்றைய தினம் யாருக்கும் பணம் கடனாக தர வேண்டாம்.

விருச்சிகம் செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திரனும் ராகுவும் இணைந்திருக்க கிரகணம் நிகழ்கிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சண்டை சச்சரவுகளை தவிர்க்கவும் உங்கள் குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையே சில சிக்கல்கள் உள்ளன. வாழ்க்கைத் துணையுடன் சின்னச் சின்ன பிரச்சினைகள் காரணமாக கூடுமானவரைக்கும் மவுன விரதம் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை இன்றைய தினம் தவிர்த்து விடுவது நல்லது.

தனுசு குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்கிறது. உங்கள் ராசிக்கு திடீர் யோகங்கள் கை கூடி வரும். பங்குச்சந்தைகளில் செய்த முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரும். பிள்ளைகள் மூலம் இன்று நல்ல செய்திகள் தேடி வரும். உடல் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் இன்றைக்கு தீரப்போவதற்கான வழி பிறக்கும். நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். கிரகணம் முடிந்த பின் பூஜை அறையில் விளக்கேற்றி இனிப்பு நைவேத்தியம் செய்து வழிபடவும்.

மகரம் சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, இன்றைய தினம் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்வதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உங்களுக்கு சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தருவார்கள். அதே நேரத்தில் பண வரவும் அதிகரிக்கும் சேமிப்பும் கூடும். தாய் ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்வதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். கிரகணம் முடிந்த உடன் குளித்து விட்டு அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள்.

கும்பம் சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே..சந்திர கிரகணம் நிகழும் நாளில் உங்களுடைய புதிய முயற்சிகள் முடிவுக்கு வரப்போகிறது. மிகப்பெரிய வெற்றி கிடைக்கப்போகிறது. உங்களுக்கு இருந்த சிக்கல்கள் நீங்கி நல்ல நேரம் தொடங்கப்போகிறது. பண விசயத்தில் சிக்கல்கள் நீங்கப்போகிறது. பணத்தை கொடுக்காமல் இதோ அதோ என்று இழுத்தடித்தவர்கள் வீடு தேடி வந்து பணத்தை கொடுத்து விட்டு போவார்கள். திடீர் ஜாக்பாட் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். ஏழரை சனியில் விரைய சனி நடப்பதால் பணம் வரும் வேறு வகையில் முதலீடு செய்வது நல்லது. கிரகணம் முடிந்த பின் குளித்து விட்டு பிறை சூடிய சிவபெருமானை வணங்குவது நல்லது.

மீனம் குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன , குடும்ப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நிகழ்வது சிறப்பானது. உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த பண நெருக்கடிகள் நீங்கும். நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். சொத்து சேர்க்கை ஏற்படும். பெரிய அளவில் சொத்து வாங்குவதற்காக இன்று பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. கிரகண நாளில் யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் சிக்கலாகிவிடும். கிரகணம் முடிந்த பின் சிவ ஆலயம் சென்று கல்கண்டு சாதம் வைத்து வழிபடவும்.


Comments

Popular posts from this blog

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

உத்தரகோசமங்கை...

அன்னம்+காவடி+ஆட்டம்