விஞ்ஞானமும் மெய்ஞானமும்
*விஞ்ஞானமும் மெய்ஞானமும்* *********************************** ஆதியும் அந்தமும் இல்லாத பராபரம் பேதமது ஆகிப் புணரும் பராபரை என்று திருமந்திரம் சொல்கிறது. வெட்ட வெளியே மெய்யென்று இருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி குதம்பாய் என்று இந்த வெட்ட வெளியாகிய பிரபஞ்சத்தைக் குதம்பைச் சித்தர் குறிப்பிடுகிறார். உலகம் தோன்றி, அதில் உயிரினங்கள் தோன்றி, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் பேரில் ஆதி முதல் மனிதன் தோன்றி, மானுட வர்கம் பெருகி, மனிதன் சிந்திக்க கற்றுகொண்ட காலம் முதலாக மனித அறிவு வளர்ந்து வந்து இருக்கிறது. இந்த அறிவின் வளர்ச்சி காரணமாகவே; இன்றய அறிவியல் புதுமைகளும், கலைப்புதுமைகளும், இலக்கிய இலக்கணங்களும் வளர்ந்து நின்று மானுட வாழ்வை மிளிரச் செய்துக் கொண்டு இருக்கின்றன. இவை அனைத்துக்கும் அடிப்படை மனிதன் பெற்றுக் கொண்ட அறிவின் முதிர்ச்சியே ஆகும். அறிவு என்பது அறிந்து வைத்துக் கொள்ளுவது என பொருள்படுகிறது. அறிந்து கொள்ளுவதாகிய இந்த அறிவு, ஞானம் என்ற சொல்லாலும் குறிக்கப்படுகிறது. இந்த அறிவாகிய ஞானம், இரண்டு வகையாக சான்றோர்களால் பிரித்துப் பார்க்கப்படுகிறது. ஒன்று விஞ்ஞானம் மற்றது மெய்ஞானம். விஞ்ஞானம...