"ஒவ்வொரு புத்தகமும் மனிதனை நல்வழிப்படுத்தும் சக்தி பெற்றவை"

 ஒவ்வொரு புத்தகமும் மனிதனை நல்வழிப்படுத்தும் சக்தி பெற்றவை என்றார் கவிஞர் நெல்லை ஜெயந்தா.

பெரம்பலூர் நகராட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், நேஷனல் புக் டிரஸ்ட், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், மக்கள் பண்பாட்டு மன்றம் சார்பில் ஜன. 27 ஆம் தேதி முதல் பிப். 5 ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில், ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற கவிஞர் ஜெயந்தா, சில நேரங்களில் சில புத்தகங்கள் என்ற தலைப்பில் மேலும் பேசியது:
நாம் படிக்கும் அனைத்து புத்தகங்களும் நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ஒருசில புத்தகங்கள் நம்மில் மிகப்பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் வல்லமை பெற்றவையாக அமையும். புத்தகங்களை மேலிருந்து கீழாக படிக்கப் படிக்க, நம் வாழ்க்கை கீழிருந்து மேலாக உயரும்.
பள்ளிகளுக்கு செல்பவர்கள் புத்தகங்களோடு செல்வார்கள். புத்தகங்களைப் படித்து வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் பலரும் படிக்கும் செய்திகளாக புத்தகங்களுக்குள் இருப்பர். வாசிப்பு என்பது, அத்தனை சக்தி மிக்கது. வாசிப்பு நம்மை வாழ்வில் உயர்த்தும். ஒவ்வெரு புத்தகமும் மனிதர்களை நல்வழிப்படுத்தும் சக்தி பெற்றவை. புத்தகங்களை படியுங்கள்; புத்தகத் திருவிழாக்களை கொண்டாடுங்கள் என்றார் அவர்.
தொடர்ந்து, ஒரு சொல் என்னும் தலைப்பில் கவிஞர் சுமதிஸ்ரீ பேசியது:
தமிழர்கள் பயன்படுத்தி வந்த ஒவ்வொரு சொல்லிற்கும் ஆழ்ந்த காரணங்கள் உள்ளன. காரணமில்லாமல் எந்தவொரு சொல்லையும், வார்த்தையையும் தமிழர்கள் பயன்படுத்தவில்லை.
உதாரணமாக, மறைந்திருக்கும் பொருளை குறிக்கவோ அல்லது மறைந்துள்ளது என்பதை குறிக்கவோ, தமிழில் பயன்படுத்தப்படும் பெரும்பான்மையான பெயர்ச்சொல்கள் வே என்ற எழுத்தில் தான் தொடங்கும். வேர் மண்ணுக்குள் மறைத்திருக்கும், வேஷம் உண்மைத் தோற்றத்தை மறைத்து பொய்யான தோற்றத்தை காட்டும், வேட்டி மானத்தை மறைக்கும். இவ்வாறு பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லுக்கும் கருத்தாழமிக்க செய்திகள் அடங்கியிருக்கும்.
தமிழில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொல்லின் வீரியமும் அளப்பரியது. புத்தகங்கள் படிக்கும்போது பல்வேறு சொற்கள் நமது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்விதமாக அமையும். புத்தகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் நம்மை நல்வழிப்படுத்தும். எனவே, இதுபோன்ற புத்தகத் திருவிழாவை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.  

Comments

Popular posts from this blog

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

உத்தரகோசமங்கை...

அன்னம்+காவடி+ஆட்டம்