உலக அமைதி


உலக அமைதி

உலக அமைதி (world peace) என்பது பூமியில் நிலவுகின்ற நாடுகளும் வாழ்கின்ற மக்களும் ஒருவரோடு ஒருவர் இணைந்து, அரசியல் சுதந்திரம், அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்கின்ற இலட்சியத்தைக் குறிக்கிறது. உலகத்தில் வன்முறையும் போரும் மறைந்து, மக்கள் மனதார ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து, அமைதியை வளர்க்கின்ற அமைப்புகளை உருவாக்குவதும் உலக அமைதி என்னும் இலட்சியத்தில் அடங்கும். தனிமனிதர் பகைமை உணர்ச்சிகளையும் செயல்களையும் தங்கள் வாழ்விலிருந்து அகற்றுவதும், மனித உரிமைகளை மேம்படுத்தி, கல்விதொழில்நுட்பம்மருத்துவம், முதலிய துறைகள் வழியாக உலக அமைதியைக் கொணர்வதும் இதைச் சார்ந்ததே.

"நீல உருண்டை" - விண்வெளியிலிருந்து பூமியின் தோற்றம்: ஒரு பூமி, ஒரு மக்கள் இனம்.
அமைதிக் குறியீடு

மனிதரும் உலக அமைதியும்தொகு

உலக அமைதி என்பது கருத்தளவில் நிகழலாம் என்றாலும், நடைமுறையில் நிகழ வாய்ப்பில்லை என்று சிலர் கருதுகின்றனர். மனித இயல்பு உலக அமைதியைப் பேணுவதாக இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.[1][2] மனிதர்கள் தம் இயல்பிலேயே வன்முறைச் சார்புடையவர்கள் என்றும், பகுத்தறிவு கொண்டவர்கள் என்னும் முறையில் சில சூழ்நிலைகளில் அவர்கள் வன்முறைச் செயலில் ஈடுபடுவார்கள் என்றும் இக்கருத்து உள்ளது.[1][2]

மேற்கூறிய கருத்துக்கு மாறான ஒரு கருத்தும் உள்ளது. அதாவது, போரும் வன்முறையும் மனித இயல்போடு இயற்கையாகவே இணைந்தவை அல்ல. மாறாக, பிறரோடு அமைதியில் வாழ்வதும், ஒத்துழைத்துச் செயல்படுவதும் உயர்நிலை விலங்குகளிடமும் மனிதரிடமும் இயல்பாக உள்ள பண்புகள் ஆகும்.[3] இதன்படி, மனிதர் தம் இயல்பிலேயே வன்முறையாளர்கள் என்னும் கருத்துதான் உலகில் அமைதி ஏற்படுவதற்குத் தடையாக உள்ளது.[4]

உலக அமைதி பற்றிய கொள்கைகள்தொகு

உலக அமைதியை நடைமுறைக்குக் கொணர்வது எவ்வாறு என்பது குறித்து பல கொள்கைகள் எழுந்துள்ளன. அவற்றுள் சில கீழே தரப்படுகின்றன:

உலகிலுல் உள்ள வளங்களைப் பகிர்ந்துகொள்வதில் மோதல் ஏற்படவில்லை என்றால் உலக அமைதி ஏற்படும் என்பது ஒரு கொள்கை.

உலக அமைதி பற்றிய அரசியல் கருத்தியல்கள்தொகு

ஒரு குறிப்பிட்ட அரசியல் கருத்தியல் செயலாக்கப்பட்டால் அதன் கட்டாய விளைவாக உலக அமைதி தோன்றும் என்றொரு பார்வை உள்ளது. ஐக்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் "உலகில் குடியரசு ஆட்சிமுறை பரவினால் அதுவே அமைதிக்கு வழி" என்று கூறினார்[5] மார்க்சிய கருத்தியலாளர் லியோன் திரொட்ஸ்கி உலகப் புரட்சி நிகழ்ந்தால் அதன் விளைவாகப் பொதுவுடைமை அமைதி ஏற்படும் என்றுரைத்தார்.[6]

குடியரசு ஆட்சிமுறையும் உலக அமைதியும்தொகு

குடியரசு ஆட்சி நிலவும் நாடுகள் அரிதாகவே ஒன்று மற்றொன்றுக்கு எதிராகப் போர்தொடுக்க முன்வருகின்றன என்பதற்குப் போதிய நடைமுறை ஆதாரம் உள்ளது என்று, குடியாட்சி வழி அமைதிக் கொள்கையினர் வாதாடுகின்றனர்.[7][8][9][10] இக்கொள்கைக்கு விதிவிலக்காக மூன்று "போர்கள்" மட்டுமே உள்ளன. அவைகூட, இரத்தம் சிந்தாத விதத்தில் நடந்தேறின. அப்போர்கள்: 1) ஐக்கிய இராச்சியத்திற்கும் ஐசுலாந்து நாட்டிற்கும் இடையே வட அட்லாண்டிக் கடலில் "காட்" மீன் பிடிக்கும் உரிமை பற்றி 1950களிலும் 1970களிலும் எழுந்த பிரச்சினை.[11] 2) கானடாவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையே பன்னாட்டுக் கடல்நீரில் மீன் பிடித்தல் பற்றி 1995இல் எழுந்த பிரச்சினை [12]. 3) இரண்டாம் உலகப்போரின்போது ஐக்கிய இராச்சியம் ஐசுலாந்து போரில் ஈடுபட்டது (1940, மே 10).[13].

ஜேக் லேவி என்பவர் 1988இல் கூறியது: "பன்னாட்டு உறவுகளைப் பொறுத்தமட்டில், ஏறக்குறைய ஒரு நடைமுறைச் சட்டம்போலக் குடியாட்சி முறைவழி உலக அமைதி என்னும் கொள்கை உள்ளது."

தொழிற்புரட்சிக்குப் பிறகு, உலகின் பல நாடுகள் குடியரசு ஆட்சிமுறையைத் தழுவியுள்ளன. குடியரசு ஆட்சிமுறை பரவலாகவும் ஆழமாகவும் வேரூன்றினால் உலக அமைதி ஏற்படும் என்பது எதிர்பார்ப்பு. ஆயினும், இக்கொள்கைக்கு விதிவிலக்குகள் பல எழக்கூடும்.

முதலாளித்துவ அமைதிக் கொள்கைதொகு

ஐன் ராண்ட் (Ayn Rand) என்னும் அறிஞர் "முதலாளித்துவ அமைதிக் கொள்கையை" ஆதரிக்கிறார். அக்கொள்கைப்படி, உலகில் இதுவரை நடந்துள்ள பெரும் போர்களில் பெரும்பான்மைப் போர்கள் "கட்டுப்பாட்டு பொருளாதார" அமைப்பு நிலவிய சூழ்நிலைகளிலேயே ஏற்பட்டுள்ளன. சுதந்திர பொருளாதார அமைப்பு நிலவிய நாடுகளில் பொதுவாக அமைதி நிலவி வந்துள்ளது. 1815இல் நடந்த நெப்போலியனிய போர்களுக்குப் பிறகு 1914 வரை (முதல் உலகப்போர்) நாடுகள் போரில் ஈடுபடவில்லை. இரு விதிவிலக்குகள் 1870இல் நிகழ்ந்த பிராங்கோ-புருச்சியப் போரும், 1898இல் நிகழ்ந்த எசுப்பானிய-அமெரிக்கப் போரும் ஆகும்.

19ஆம் நூற்றாண்டில் நிலவிய முதலாளித்துவ அமைப்பு முற்றிலும் கட்டுப்பாடற்ற, சுதந்திர அமைப்பாக இருக்கவில்லை. மாறாக, கலப்புப் பொருளாதார அமைப்பாகவே இருந்தது. எனினும், அங்கே முதலாளித்துவம் சிறப்பிடம் வகித்தது. அரசுகள் பொருளாதார அமைப்பில் தலையிட்டு, பொருளாதாரப் போக்கை நெறிப்படுத்த முனைந்தன. அச்சூழலில்தான் 1914இல் முதல் உலகப்போர் வெடித்தது.[14][15]

மேற்கூறிய "முதலாளித்துவ அமைதிக் கொள்கை" மேற்கத்திய நாடுகள் ஐரோப்பாவுக்கு வெளியே குடியேற்ற ஆதிக்கத்தைப் போர்மூலம் பரப்பியதைக் குறிப்பிடத் தவறுகிறது. தவிர, இத்தாலியும் செருமனியும் நாட்டு ஐக்கியம் உருவாக்க மேற்கொண்ட போர்கள், பிராங்கோ-புருச்சியப் போர், கிரிமேயப் போர், ஐரோப்பாவில் நிகழ்ந்த பிற போர்கள் ஆகியவையும் "முதலாளித்துவ அமைதிக் கொள்கைக்கு" ஆதரவு அளிப்பதாகத் தெரியவில்லை.

மேலும், உலக அமைதி என்பது "போரில்லாத நிலைமை" என்பதில் மட்டுமே அடங்கிவிட முடியாது என்பதும் கருதத்தக்கது. வர்க்கங்களுக்கிடையே மோதல் மனப்பான்மை தொடர்ந்து நிலவுவது அமைதியென அழைக்கப்பட முடியாதது. முதலாளித்துவம் உலக அமைதிக்குக் காரணமாக அமைந்தது என்னும் கொள்கை ஏற்புடையதென்றால், அரசுத் தலையீடு குறைவாகும்போது அமைதி நிலவும் என்றோ, ஒழுங்கற்ற நிலை ஏற்படும்போதும் அமைதி பிறக்கும் என்றோ கூட வாதிட முடியும். எனவே, பலர் "முதலாளித்துவ அமைதிக் கொள்கை" நிறைவுதருவதாக இல்லை என்ற முடிவுக்கு வருகின்றனர்.

கோப்டன் கொள்கைதொகு

ரிச்சர்டு கோப்டன் (1804-1865) என்னும் பிரித்தானிய அறிஞர், "நாடுகளுக்கிடையே கட்டுப்பாடற்ற வாணிகம் நடைபெறுவது அமைதிக்கு வழிகோலும்" என்னும் கொள்கையை எடுத்துரைத்தார். அரசியல் உறவுகள் குறைந்து, பொருளாதார உறவுகள் கட்டுப்பாடற்ற, சுதந்திர முறையில் வளரும்போது உலக அமைதியும் மக்களிடையே புரிதலும் உருவாகும் என்று அவர் கூறினார். அக்கொள்கைப்படி, வாணிகத்தைக் கட்டுப்படுத்துகின்ற அரசியல் தலையீடுகள் அகற்றப்பட வேண்டும். நாட்டு ஆட்சியாளர் தனி மனிதரின் சுதந்திர வணிகச் செயல்பாடுகளைத் தடுக்காமலும், சுங்கவரி விதித்துக் கட்டுப்படுத்தாமலும் இருக்க வேண்டும். சுதந்திர வணிகம் நடக்கும்போது எந்த நாடும் முற்றிலும் தன்னுரிமை கொண்டதாக மாறாது. எடுத்துக்காட்டாக, ஒரு நாடு துப்பாக்கி உற்பத்தி செய்கிறது, மற்றொரு நாடு வெடிமருந்து செய்கிறது என்றால் அந்த இரு நாடுகளும் ஒன்றோடொன்று போரில் ஈடுபட முடியாது. ஏனென்றால், துப்பாக்கி இருக்குமிடத்தில் வெடிமருந்து இராது, வெடிமருந்து இருக்கும் இடத்தில் துப்பாக்கி இராது.[16]

மேற்கூறிய கோப்டன் கொள்கையிலும் குறையுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு நாடு போருக்குப் போகத் தீர்மானித்துவிட்டால், தற்காலிகமாக ஓரளவு தன்னிறைவை உருவாக்கிக் கொள்ள முடியும். அதுபோலவே, தனக்குத் தேவையான ஆயுதங்கள் போன்றவற்றை வேறு பல நாடுகளிடமிருந்து வாங்கிக்கொள்ள முடியும். இரண்டாம் உலகப்போர் இதற்கு எடுத்துக்காட்டு. செருமனி போர்க்கால பொருளாதார அமைப்பை உருவாக்காமல் இருக்கும்போதே, போதிய அளவு தன்னிறைவு கொண்டதாக மாறியது. அதுபோல, பிரிட்டனும் போதிய தன்னிறைவு பெற்றது. போரும் நிகழ்ந்தது.

கோப்டன் கொள்கையை ஆதரிப்பவர்கள் மேலும் கூறுவது: கட்டுப்பாடற்ற, சுதந்திர வாணிகம் நாடுகளுக்கு இடையே நடைபெற்றால் போர்கள் எழவே செய்யாது என்று கூற முடியாவிட்டாலும், உற்பத்தி, ஆய்வு, விற்பனை ஆகிய துறைகளில் ஈடுபடுகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் போரினால் பெரிதும் பாதிக்கப்படும். செலவு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் அந்நிறுவனங்கள் போருக்கு எதிராகக் குரல் கொடுக்கும். இவ்வாறு, கட்டுப்பாடற்ற, சுதந்திர வணிகம் உலக அமைதிக்கு வழிவகுக்கும்.

ஒருவரையொருவர் அழிக்கும் செயல்தொகு

"ஒருவரையொருவர் அழிக்கும் செயல்" என்பது ஒரு இராணுவக் கொள்கை ஆகும். அதன்படி, அணு ஆயுதங்களைக் கைவசம் கொண்டுள்ள இரு நாடுகள் அந்த ஆயுதங்களை முழுப்போரில் பயன்படுத்தும்போது எந்தவொரு நாடுமே வெற்றிபெற முடியாது; மாறாக ஒரு நாடு மற்ற நாட்டை அழிக்கின்ற அதே வேளையில் தானும் அழிந்துபோகும். தாக்கிய நாடும் தாக்கப்பட்ட நாடும் அழிவதை இக்கொள்கை எடுத்துரைக்கிறது.[17][18]

இக்கொள்கைப்படி, அணு ஆயுதப் போரில் ஈடுபட்டால் அனைவருக்கும் அழிவே என்னும் அடிப்படையானது உலக அமைதிக்கு வழிவகுக்கிறது. ஒருவித பனிப்போர் தொடர்ந்தாலும், போர் நடவடிக்கைகள் நிகழாமல் இருக்கும்.

உலக அமைதி பற்றி ஐக்கிய நாடுகள் பட்டயமும் பன்னாட்டுச் சட்டமும்தொகு

இரண்டாம் உலகப்போருக்குப் பின், "பிற்காலத் தலைமுறைகளைப் போர் என்னும் கேட்டிலிருந்து காக்கும் பொருட்டு" 1945இல் உலக நாடுகள் இணைந்து உருவாக்கிய பன்னாட்டு நிறுவனமே ஐக்கிய நாடுகள் அவை ஆகும். இருபதாம் நூற்றாண்டில் இரு பெரும் போர்கள் நிகழ்ந்து உலக மக்களுக்கு மாபெரும் இடர் விளைவித்த அனுபவம் கசப்பான ஒன்றாயிற்று. என்வே, உலக அமைதியை நிலைநாட்டவும், மனித உரிமைகளை வலியுறுத்தி, பன்னாட்டுச் சட்ட அமைப்புக்கு இணங்கத் தனி நாடுகள் இயங்க வழிவகுக்கவும், பன்னாட்டுப் பாதுகாப்பையும் அமைதியையும் வளர்க்கவும் பன்னாட்டு ஒருங்கிணைப்பு நிறுவனமாகிய ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் சாற்றுரையை உருவாக்கியது. அதன் முகப்புரையில்:

என்னும் கூற்று உள்ளது.[19][20]

உலகமயமாதலும் அமைதியும்தொகு

இன்றைய உலகில் நாடுகள் மற்றும் மக்கள் குழுக்களிடையே உறவுகள் பெருகி, வாணிகம் தழைத்து, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, அரசியல், பண்பாடு, தொழில்நுட்பம் முதலியவை பகிரப்பட்டு மனித இனம் ஒன்றிணைந்து வருகின்ற போக்கு உலகமயமாதல் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய உறவு வளர்ச்சிகள் உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு வழி என்னும் கருத்து உள்ளது.

பிளவுபட்ட பகுதிகளாகக் கிடந்த நாடுகள் பல இன்று மைய அரசியல் அமைப்பின் கீழ் ஒருங்கிணைந்த நாடுகளாக மாறியுள்ளன. எடுத்துக்காட்டாக, இத்தாலி, சீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், செருமனி, இந்தியா, ஐக்கிய இராச்சியம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். மேலும், பல நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதும் வளர்ந்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றியத்தைக் காட்டலாம். படிப்படியாக, உலகளாவிய ஒன்றியம் பிறக்கவும் வழி திறந்துள்ளது.

தனித்துநிற்றலும் தலையீடு தவிர்க்கும் கொள்கையும்தொகு

நாடுகள் அமைதியைப் பேணி, நல்லுறவோடு வாழ வேண்டும் என்றால் மற்ற நாடுகளின் உள் ஆட்சிப்போக்கில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்னும் கொள்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கொள்கை "தலையீடு தவிர்க்கும் கொள்கை" எனப்படுகிறது. ஒவ்வொரு நாடும் தனது சொந்த ஆட்சிமுறையில் கவனம் செலுத்தி, நல்லாட்சியை ஏற்படுத்தும்போது அமைதி நிலவும் என்பது கருத்து.

இத்தகைய "தலையீடு தவிர்க்கும் கொள்கை" "தனித்தியங்கும் கொள்கை"யிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கப்பட வேண்டும். தனித்தியங்கும் கொள்கை பிற நாடுகளின் உள் ஆட்சிப்போக்கில் தலையிடலாகாது என்பதை வலியுறுத்துவதோடு, "பாதுகாப்பு வாதத்தையும்" (protectionism) முன்வைக்கின்றன. அதாவது, தமது சொந்த பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, வேளாண்மை மானியங்கள் போன்ற சிறப்புச் சலுகைகள் கொடுத்து, சுதந்திர முறை வாணிகத்துக்கு வரையறைகள் விதிக்கின்றன.

கடந்த காலத்தில் "தனித்தியங்கும் கொள்கை"யைச் சப்பான் போன்ற நாடுகள் கடைப்பிடித்ததுண்டு. சப்பானின் இராணுவத் தளபதிகளாக ஆட்சிசெய்த தோக்குகாவா மரபினர் 1603-1868 ஆண்டுகளில் தனித்தியங்கும் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடித்தனர்.[21]

அடிமட்ட உறவுகள் வழி அமைதி வளர்த்தல்தொகு

உலக அமைதி ஏற்பட அடிமட்டத்தில் மக்களிடையே அமைதி வளர வேண்டும் என்பது இன்னொரு கருத்து ஆகும் [22] அதிகாரம் ஓர் இடத்தில், ஆளில், அமைப்பில் குவிவதற்கு மாறாக, பரவலாக விரியும்; அப்போது வன்முறையும் குறையும் என்பது இக்கருத்துக்கு அடிப்படை. முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட செயல்திட்டம் இங்குக் கிடையாது. மையப்படுத்தப்பட்ட அரசு அதிகாரமோ, தெய்வீக அதிகாரமோ ஏற்கப்படுவதில்லை. மாறாக, தல அளவில், வலைப்பின்னல் போன்ற உறவுப் பரிமாற்றங்கள்மூலம் பொருளாதார, பண்பாட்டு, அரசியல் உறவுகள் வலுப்படும். சமய, இன, நாட்டு வேறுபாடுகளை வலியுறுத்தாமல், அனைவரும் பங்கேற்க வாய்ப்பளித்தல் இதன் ஒரு பகுதியாகும்.

மேலும், "சிந்தனைச் சோதனகள்" வழியாகவும், "பின்முறை உரை" (backcasting) வழியாகவும், இலட்சிய உலக அமைதி எவ்வாறிருக்கும் என்பதைக் கருத்தில் வரவழைத்து, அந்த இலட்சியத்தை அடைவதற்கான வழியாக உறவு மேம்படுத்தலை இக்கருத்து முன்வைக்கிறது.

இத்தகைய ஒத்துழைப்புத் திட்டங்களாக விக்கிப்பீடியா, "அமைதியின் தேவை" (Need4peace) மற்றும் சமூக வலைத்தளங்களைக் கருதலாம்.

பொருளாதார நெறிக் கொள்கைதொகு

மைக்கல் மூசோ (Michael Mousseau) என்னும் அறிஞர் உலக அமைதி பேணுதல் குறித்து "பொருளாதார நெறிக் கொள்கை" என்றொரு கருத்தியலை முன்வைக்கிறார்[23]. பொருளாதார முறைகள் ஒன்றில் "காவலர்-பெறுநர்" (patron-client) வகையதாக இருக்கலாம், அல்லது பொதுச் சந்தை சார்புடையதாக இருக்கலாம். காவலர்-பெறுநர் வகைப் பொருளாதாரம் உட்குழுக்கள் சலுகை பெற்று முன்னேறுவதைக் கருத்தில் கொண்டிருக்கும். அதில் தலைவர் கையில் அதிகாரம் இருக்கும். அவரிடமிருந்து பெறுநர்கள் சலுகைகள் பெற்றுக்கொண்டு, அவருக்குத் தங்கள் ஆதரவை அளிப்பார்கள். இவ்வகைப் பொருளாதாரம் நிலவும் சமூகங்களில் சமூக உடன்பாடு (social contract) வலுவோடு இராது.

மாறாக, சமூக உடன்பாடு வலுவுடன் விளங்கும் சமூகங்களில் உட்குழு மனப்பான்மை என்னும் குறுகிய பார்வை இராது. சமூக உடன்பாட்டில் அன்னியரும் வெளிக்குழுவினரும் இருப்பதால் அவர்களும் பொருளாதாரச் செயல்பாட்டில் மைய இடம் வகிப்பர். சந்தைச் சார்புடைய பொருளாதாரம் தழைக்கும். இவ்வாறு, விரிந்த போக்கில் பொருளாதார நெறி அமையும்போது உட்குழுக்களுக்கும் வெளிக்குழுக்களுக்கும் இடையே உறவுகள் விரியும். ஒருவரின் நலன் வளரும்போது மற்றவரின் நலமும் வளரும். எனவே, ஆட்சியில் இழுபறி ஏற்படும்போது அதைத் தீர்த்துவைப்பதில் எல்லாத் தரப்பினரும் ஆவல் காட்டுவர். இவ்வாறு உலக அமைதி வளரும்.[24][25]

இவ்வாறு சமூக உடன்பாடு வலுவுடன் விளங்கும் சமூகங்கள் "சுதந்திரக் குடியரசுகள்" (liberal democracies) ஆகும். இவையே அமைதியை வளர்க்கும் தன்மை கொண்டுள்ளன.

ஆனால், காவலர்-பெறுநர் வகையில் அமைந்த பொருளுதார-அரசியல் அமைப்புகள் உட்குழுக்களின் முன்னேற்றத்தையே மையப்படுத்துவதால் பிற குழுக்களைப் புறக்கணிக்கும் போக்கு அங்கே தோன்றும். இதனால் குழுப் பகைமைகள் உருவாகும். இனங்களுக்கிடையே மோதல்களும் போர்களும் ஏற்படும். இனப்படுகொலை போன்ற கொடுமைகள்கூட நிகழும்.[26]

சந்தைச் சார்புடைய பொருளாதார அமைப்புகள் தனிமனித உறவின் அடிப்படையில் எழாமல் பொதுவான பொருளாதார சக்திகளின் செயல்பாட்டால் உருவாகின்றன. அரசு வகுக்கின்ற சட்டங்களுக்கு உட்பட்டு, பொருளாதார உறவுகள் அன்னியரையும் வெளியாட்களையும் நம்பி ஏற்பதிலிருந்து எழுவதால், அங்கே உட்குழு வெளிக்குழு என்னும் வேறுபாடு எழுவதில்லை. ஒருதலை சார்பும் தோன்றுவதில்லை. மாறாக, சந்தையை மையமாகக் கொண்ட "நடுநிலை" (market neutrality) வெளிப்படும்.

எனவே, சந்தையை மையமாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்படுகின்ற நாட்டுப் பொருளாதார அமைப்புகள் அமைதிக்கு வழிகோலும் தன்மையன. அந்நாடுகள் எளிதாகப் போரில் ஈடுபட முன்வர மாட்டா. போர் என்பது "எதிரிக்குத்" தீங்கிழைப்பதை உள்ளடக்கும். அவ்வாறு தீங்கிழைப்பதால் போர் தொடுக்கும் நாடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும். நாடுகள் இவ்வாறு தமக்குத் தாமே தீங்கு வருவிப்பதைத் தவிர்க்கப் பார்க்கும். மாறாக, ஒத்துழைப்பையும் கூட்டுச் செயல்பாட்டையும் ஊக்குவிக்கும். எனவே, சந்தை மையப் பொருளாதாரங்கள் எங்கு உளவோ, அங்கு உலக அமைதிக்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

மேலே விளக்கப்பட்ட "பொருளாதார நெறிக் கொள்கை" தொழிற்புரட்சியைத் தொடர்ந்து வரலாற்றில் எழுந்த "கட்டற்ற முதலாளித்துவக் கொள்கை"யிலிருந்து மாறுபட்டது. சந்தை என்பது தன்னிலேயே "நடுநிலை" கொண்டது, கட்டுப்பாடற்ற சந்தையே செல்வம் உருவாகும்/உருவாக்கும் வழி என்பது கட்டற்ற முதலாளித்துவக் கொள்கையின் கருதுகோள். ஆனால், பொருளாதார நெறிக் கொள்கை சந்தைப் பொருளாதாரத்தை மனித உறவுகளின் வெளிப்பாடாகக் காண்கிறது. உட்குழுக்களும் வெளிக்குழுக்களும், உறவினரும் அன்னியரும் சமூக உடன்பாட்டின் வழி ஒருவர் ஒருவரின் வளர்ச்சியையும், அனைவரின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்தும் வாய்ப்பு இவ்வாறு எழுகின்றது. அங்கே அரசு கட்டுப்பாட்டுக்கு இடம் உண்டு; சமூக உறவுகளின் அடிப்படையில் "சமூகச் சந்தை" (social market) தோன்றும். இதுவே உலக அமைதிக்கும் வழியாகிறது.

Comments

Popular posts from this blog

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

உத்தரகோசமங்கை...

அன்னம்+காவடி+ஆட்டம்